கோவிந்து என்ன சொன்னான் தெரியுமா பாஸ்?… மெயில் மூலம் …

லண்டன்: ஒருவரைப் பற்றி ஒருவர் வத்தி வைப்பது, புறணி பேசுவது என்பதெல்லாம் இப்போது மாடர்ன் ஆகி விட்டதாம். காதுகளோடு உதடு வைத்து பேசியகாலம் போய் இப்போது இமெயில் மூலமும், பேஸ்புக் மூலமும், டிவிட்டர் மூலமும் சக ஊழியர்களைப் போட்டுக் கொடுப்பது அதிகரித்துள்ளதாம்.

அலுவலகங்களில் ஒருவரைப் பற்றி ஒருவர் போட்டுக் கொடுப்பது, புறமுதுகிட்டுப் பேசுவது, குற்றம் சாட்டுவது என்பதெல்லாம் சகஜமானதுதான். ஆனால் பெரும்பாலும் இதை ரகசியமாக, காதோடு காதாகத்தான் முன்பு செய்து வந்தார்கள். ஆனால் இப்போது இது நவீனமாகி விட்டதாம். இணையதளங்களைப் பயன்படுத்தி பிடிக்காதவர்களைப் போட்டுப் பார்க்கிறார்களாம்.

இதுகுறித்து நாட்டிங்காம், ஷெப்பீல்ட் ஆகிய ஊர்களைச் சேர்ந்த உளவியலாளர்கள் கூறுகையில், இப்படிப்பட்ட சைபர் தாக்குதல்களால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள். குறிப்பாக இளம் வயதினர்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

வயது முதிர்ந்தவர்களுக்கு மன உறுதியும், முதிர்ச்சியும் இருப்பதால் அவர்கள் இதை தைரியமாக சந்தித்து விடுகிறார்கள். ஆனால் இளம் வயதினர்தான் கடும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்று கூறுகின்றனர். இமெயில் மூலம் சக ஊழியர்கள் குறித்து தங்களது பாஸ்களிடம் வத்தி வைப்போர் அதிகரித்துள்ளனராம்.

தகவல் தொழில்நுட்பத்தின் விஸ்வரூப வளர்ச்சியால் வத்தி வைப்பது முன்பை விட அதிகரித்துக் காணப்படுகிறதாம். தங்களுக்கு ஒருவரைப் பிடிக்காவிட்டால் உடனே மெயிலைத் தட்டி விட்டு விடுகின்றனராம். இன்னும் ஒரு படி மேலே போக விரும்புவோர் பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் போட்டுத் தாளித்து விடுகின்றனராம். மேலும் தங்களது அலுவலகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் அடையாளம் தெரியாத இமெயில் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து வதந்தி பரப்பி விடுகின்றனராம்.

எப்படியெல்லாம் கூகுள்ள சர்ச் பண்ணி யோசிக்கிறாங்கப்போய்...!

Leave a Reply