முகப்புத்தகத்தில் முகம் செய் …. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா
04 நவம்பர் 2012
இணையம் தகவற்தொழில் நுட்ப உலகில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இணையம் மனிதர்களின் பௌதீக அசைவியக்கத்தை(physical movement) தூண்டாமல் மெய்நிகர் உலகில் (virtual world) அவர்களை இருந்தஇரையில் இயங்கத்துண்டுகிறது. இதற்குக் காரணமாக இணையத்தில் வளர்ந்து நிற்கும் சமூக ஊடக வலையமைப்புக்கள் (social media networks) இருக்கின்றன. இச் சமூக வலைத் தளங்கள் தனிமனித நடத்தைகளிலும் சமூகத்திலும் அந்தச்சமூகத்தின் அரசியலிலும் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து நின்று ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கான ஒரு முன்குறிப்பை இக்கட்டுரை தரமுயல்கிறது.
சாதாரண மனிதர்களின் நட்பு வட்டம் சிறிதாக இருந்த காலம் போய் அது சமூக ஊடக வலையமைப்புக் காரணமாக விரிவடைந்து வருகிறது. பௌதீக தூரத்தில் தங்கியில்லாமல் மனிதர்கள் தங்கள் அகத்தையும் புறத்தையும் பரிமாறிக் கொள்கின்றார்கள். முன்பின் தெரியாதவர்களுடன் நட்பை உருவாக்க மனிதர்கள் தயங்கிய காலம் போய் இந்த வலைத்தளங்களில் எவருடனும் நட்பை உருவாக முனையும் தன்மை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்தப்பண்பை வெளிப்படுத்தி நிற்கின்றனர். இணைய இணைப்புள்ள வீடுகளில் முதியவர்களும் சமுக ஊடகவலைத்தளங்களுக்குள் இணைந்து வருகின்றனர். மேலும் நண்பர்களுடன் உரையாடுவதற்குத் தனியாக நேரங்களை ஒதுக்கிய காலங்கள் போய் வேலை நேரத்திலும் நமது அன்றாட அலுவல்களுக்கிடையிலும் இவ்வுரையாடல்களைச் செய்துகொள்ளல் அதிகரித்து வருகிறது. என்னிடம் எக்ஸ்-கதிர்ப்படம் எடுக்க வந்த ஒருவரின் வலது கை உடைந்து தொங்கிக்கொண்டிந்தது ஆனால் அவர் தனது இடது கையில் செல்லிடப்பேசியை வைத்து ருவிற்றர் செய்துகொண்டிருந்தார் எந்தளவுக்கு இச் சமூக ஊடகங்கள் எங்களூக்குள் ஊடுருவிட்டுள்ளன என்பதற்கு இது உதாரணம். அவர் தனது நிலமையை உடனடியாகத் தனது நண்பருக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தார்.
மெய்நிகர் உலகத்தில் (virtual world) விரிந்து வரும் இந்த நட்புலகத்துள் நிலவுகிற நடபின் அல்லது உறவின் தன்மை ஆளை ஆள் நேரில் சந்தித்து உருவாகக்கூடிய நட்பின் தன்மையுள் ஒப்பிடும் போது வேறாக இருப்பதாக சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள். (இவ்வாறு மெய்நிகர் உலகில் சந்தித்துக்கொள்பவர்கள் பின் நிஜ உலகத்திலும் சந்தித்துக்கொள்கிறார்கள்.)
சமூக ஊடக வலைத்தளங்களில் மனிதர்கள் தமது அன்றாட நடத்தைகளில் தொடங்கி தமது அனுபவங்கள் மற்றும் தமது ஆழமான அக உணர்வுகள் வரை பரிமாறிக்கொள்கிறார்கள். இந்தப்பரிமாற்றம் ஒற்றைப்பரிமாணமாக இருப்பதில்லை. ஒரே நேரத்திலேயெ விம்பம் வார்த்தைகள் ஒலி அசைவியக்கம் என யாவற்றையும் ஆயிரக்கணக்கானவர்களுடன் பரிமாறிக்கொள்ள முடிகிறது. இந்தப்பரிமாற்றத்திற்கு வலையமைப்பு நிர்வாகிகள் வழங்குகிற தரவளவு (data limit) எல்லையைத்தவிர மன எல்லைகள் இல்லை.
இங்கு இன்னுமொரு விடையத்தையும் கவனிக்க முடிகிறது முகத்துக்கு முகமான நட்புறவில் நாங்கள் ஒரு கருத்தைப் பரிமாறும் போது எமது உடல் மொழியையும் சேர்த்தே பரிமாறுகிறோம். மொழியின் தொனி மொழி கொண்டுவரும் உணர்வு உரையாடுவர்களின் ஆளுமை போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த மெய்நிகர் உலகில் நிகழும் உரையாடலுக்குள் வருவதில்லை. இதனால் கருத்தை வாசிப்பவர் கருத்தைக் கூறுபவரின் ஆளுமைக்குள் சென்றுவிடத்தேவை இல்லாது போய்விடுகிறது. கருத்தைப்பரிமாறுபவரின் உணர்வையும் அனேகமாக புரிந்து எதிர்வினையாற்றவேண்டிய தேவை இல்லாமல் போகிறது. உளவியலாளர்கள் சமூக ஊடக வலையமைப்புக்களைத் தீவிரமாகப்பயன்படுத்துபவர்களிடம் இரக்கவுணர்வு அல்லது பரிவுணர்வு (Empathy) வெளிப்படும் உணர்வுகளைத் தானுமுணர்தல் (compassion) போன்ற பண்புகளில் பிரச்சனை அல்லது குறைபாடு இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள். குறிப்பாக முகப்புத்தகம் ருவிற்றர் போன்றவற்றில் நிகழும் உரையாடல்கள் இந்த வகைக்குள் வருகின்றன.
பல மனிதர்களுக்கு சமூக ஊடக வலையமைப்பு அவர்களது கருத்தை இலகுவான முறையில் முன்வைக்க அல்லது எனையவர்களின் கருத்தை நிராகரிக்க உதவியாக இருக்கிறது. இதனால் நிறைய மனிதர்கள் இணைய வெளியில் துணிந்து பேசவும் முன்வருகிறார்கள். மேலும் பொய்யான அடையாளம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு மெய்நிகர் உலகில் வலம் வருதலும் சாத்தியமென்பதால் மனிதர்கள் அதிகளவில் கருத்துப்பரிமாறல்களில் கலந்துகொள்வதுடன் நட்புவட்டங்களுக்குள்ளும் இணைந்து விடுகிறார்கள். விம்ப அசைவியக்கப்பரிமாற்றத்துடன் (video conversation) கூடிய உரையாடல்களில் இதற்குச் சாத்தியம் இருப்பதில்லை.
பரஸ்பர மனித உறவுப்பரிமாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கிற நம்பிக்கை என்னும் முன்நிபந்தனை மெய்நிகர் உலகில் நடைமுறைச் சாத்தியமற்றதாகிவிட்டது. நான் யாராவது ஒருவருடன் மட்டும் பரிமாற விரும்புகிற விடையம் அவருக்கு மட்டுமே போய் சேரும் என்பதற்கு இந்த உலகில் எந்த உத்தரவாதமும் இல்ல