வன்முறை உளவியல்

வன்முறை உளவியல் - ராம் மகாலிங்கம்-யமுனா ராஜேந்திரன் உரையாடல்
06 நவம்பர் 2012

ராம் மகாலிங்கம் அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் துணைப் பேராசிரியராக இருக்கிறார். இந்த உரையாடலில் சமகால உளவியல் ஆய்வுப் போக்குகள், வன்முறை குறித்த உளவியல் ஆய்வுகள், உயிர்க்கூற்றியலுக்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்புகள், குழந்தைகளின் உளவியலில் பாலியல் வேறுபாடுகள், சாதியக் கருத்துக்களின் உருவாக்கம், சாதிய நீக்கம், புலம் பெயர்ந்த தமிழர்களின உளவியல் சிக்கல்கள் போன்றவை தொடர்பான தனது ஆய்வுகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதோடு பொதுவாக மனிதர்களின் சமூக வளர்ச்சிப் பயணத்தில் உளவியல் ஆய்வுகளின் பங்கு என்ன என்பது குறித்தும் தனது அனுபவங்களை முன்வைக்கிறார்.

ஒரு மனிதனுடைய உளவியல் என்னென்ன மாதிரியான காரணிகளால் உருவாகிறது? இன்றைய உளவியல் ஆய்வுப் போக்குகள் எத்தன்மையில் இருக்கின்றன?

பலவிதமான முறைகள் பற்றி யோசித்திருக்கிறார்கள். பிராய்டியர்கள் ஆரம்பக் குழந்தைப் பருவத்தில் இருந்து தொடர்ந்து வரும் பல்வேறு கட்டங்களில் குழந்தைகளின் அனுபவங்கள் எவ்வாறு அவர்களது நடத்தைகளைப் பாதிக்கின்றன என்று சொல்லியிருக்கிறார்கள். நரம்பியல் கோளாறுகள் சார்ந்த பிரச்சினைகள் மனப்பிறழ்வு விபரீதமான மனப்போக்குகள் உருவாவது போன்றவை பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக உள்மன ஆய்வுகள் வந்தன. பிராய்டியக் கோட்பாட்டைத்தான் மனித உளவியல் பற்றிப் பேசும்போது சொல்கிறார்கள். தற்காலத்தில் பிராய்டை அடியற்றிய ஆய்வுகள் மிகக் குறைவு. ஆனால் வேறு முறைகள் இருக்கின்றன.

ஒரு மனிதனுடைய நெறி பண்பாடு ஆளுமையில் எவ்வாறு சமூகக் கோட்பாடுகள் பயன்படுகின்றன என்பது போன்ற ஆய்வுகள் இருக்கின்றன. வைகாட்ஸ்கி என்று ஒரு ரஸ்ய உளவியலாளர் இருந்தார். அவர் ஒரு மார்க்ஸியர். அவருடைய கோட்பாடு என்னவென்றால் சமூகச் சூழல் எவ்வாறு குழந்தைகளைப் பாதிக்கின்றன அதிலிருந்து எவ்வாறு அவர்கள் பெரியவர்களாக ஆகிறார்கள் என்பதைப் பற்றி அவர் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அவருடைய சிந்தனைகள் முழுமை அடைவதற்கு முன்பாகவே நாற்பது வயதிலேயே காசநோய் வந்த இறந்து போனார். மிகைல் பக்தினுடைய காலத்தைச் சேர்ந்தவர் அவர். அவர் இறந்ததன் பிறகு ஸ்டாலின் காலத்தில் அவருடைய எழுத்துக்களை எல்லாம் எங்கேயோ மறைத்து வைத்து விட்டார்கள். சமீப காலத்தில்தான் அவருடைய ஆய்வுகள் மொழியாக்கம் பெற்று வெளியாகி வருகின்றன. நமது மன வளர்ச்சியில் குறிப்பிட்ட சூழல் என்பது எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதை அவர் பார்க்கிறார்.

கார்ஜே என்று ஸ்விட்சர்லாந்து நாட்டு உளவியலாளர் ஒருவரின் சிந்தனைகள் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பல்வேறு பருவங்களில் குழந்தைகள் வளர்ச்சியடைந்து ஒவ்வொரு கட்டத்துக்கும் போகும்போது புதுப்புது வளர்ச்சிகள் அவர்களது சிந்தனைகளில் மாற்றத்தைக் காட்டுகின்றன என்பதுதான் அவருடைய பார்வை. உடலில் இந்த வளர்ச்சிக் கட்டத்தில் ஏற்படும் மாற்றத்துக்கும் சிந்தனையில் ஏற்படும் மாற்றத்துக்கும் இடையில் ஓர் இணைப்பைக் காட்டுகிறார் அவர். அவர் ஒரு அமைப்பியல் உளவியலாளர். சமூக அமைப்பும் உடலியல் அமைப்பும் எவ்வாறு ஊடாட்டம் கொள்கின்றன என்பதை அவர் காட்டுகிறார். பிறகு கணினியியல் வளர்ந்த போது மனிதக் கணினியாக மூளையைக் கண்டு நாம் எவ்வாறு வளர்கிறோம் எவ்வாறு தகவல்களை முறைப்படுத்திக் கொள்கிறோம் செய்தியை எவ்வாறு புரிந்து கொள்கிறோம் புரிந்து கொள்வதற்கு எவ்விதமான மூளை அமைப்பு இருக்கிறது. எவ்வாறு செய்தி சொல்லப்படுகிறது. சொல்லப்படும்போது அழுத்தம் உற்சாகம் போன்ற நமது மனநிலைக்குத் தகுந்தவாறு செய்தி பதிவாவது. அந்தச் செய்தியைத் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொள்வதற்கு என்னென்ன பிரச்சினைகள் சங்கடங்கள் இருக்கின்றன எவ்வாறு அதை எளிதாக எடுத்துக் கொள்வது என்பது பற்றியெல்லாம் அவர் பேசுகிறார்.

செயற்கை அறிவுத்திறத்தை எடுத்துக் கொள்வோம். கணினியின் சதுரங்க விளையாட்டெல்லாம் அவ்வாறானதுதான். அதாவது எவ்வாறு நீங்கள் பாடம் சொல்லித் தருகிறீர்கள். பாடத்தை எவ்வாறு ஒழுங்கமைத்துக் கொள்கிறீர்கள். அதிலிருந்து கல்வியை எவ்வாறு எளிதாக்கிக் கொள்ள முடியும் என்பது போன்ற ஆய்வுகள் பெரிய அளவில் இருக்கின்றன. நாம் பிறக்கும்போதே நம்மோடு சேர்ந்து வந்திருக்கிற சக்திகளை அகநிலைச் சக்திகள் என்பார்கள். இதில் மொழி குறித்த நோம் சோம்ஸ்கியின் சிந்தனைகள் இருக்கின்றன. பிறக்கும்போதே பல மொழிகளைப் பேசும் திறனோடுதான் நாம் பிறக்கிறோம் என்கிறார் அவர். அந்தச் சக்திகள் வெளிப்படுவதற்கு குறைந்தபட்சம் நமது சூழல் அதில் நமது ஈடுபாடு அதில் என்னென்ன விஷயங்கள் உள்ளியல்பானவை என்று பார்க்கிறார்கள். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால்உள்ளியல்பாக இருப்பவை எல்லாமே உயிர்மரபியல் தன்மை கொண்டவை என்று வந்துவிடும். இது ஒரு தவறான புரிதல். சோம்ஸ்கி சொல்வது போல பிறக்கும்போதே விஷயங்களைச் செய்ய முடியும் என்றால் எல்லோராலும் எல்லாக் குழந்தைகளாலும் ஆங்கிலம் பேச முடியும். ஆனால் பேச முடியவில்லை என்றால் என்ன காரணம்? சமூக வேறுபாடுகள் என்பவை இருக்கத்தான் செய்யும் என்று அதை நியாயப்படுத்துவதற்கு இந்தக் கோட்பாடு பயன்படலாம். அதாவது செய்ய முடியாதவர்களைச் செய்ய முடிந்தவர்களாக உருவாக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் வீண். கறுப்பர்களும் ஆசியர்களும் எளிதில் கற்றுக்கொள்ள முடியாதவர்கள் என்பது போன்ற பழமைவாத விளக்கங்களுக்கு இடமளிப்பதாக இருக்கும். குழந்தைகள் பிறக்கும்போதே என்னென்ன சக்திகளோடு பிறக்கிறார்கள் என்று ஆராய்ந்தோம். எவ்வளவு சீக்கிரமாக எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள் என்று ஆராய்ந்தோம். ஒரு ஆய்வில் தெரிய வந்தது என்னவென்றால் பிறந்த பன்னிரண்டு மாதங்களுக்குள் எண்ணிக்கை பற்றிய சிந்தனை - ஒன்றும் ஒன்றும் இரண்டு இரண்டும் ஒன்றும் மூன்று என்பது போன்று - குழந்தைகளுக்குத் தெரிய வந்துவிடுகிறது. கணக்கு விதிகள் அனைத்தும் அல்ல எண்ணிக்கை பற்றிய சிந்தனை வந்துவிடுகிறது. காரணத்துவம் குறித்த அடிப்படையான கருத்து மனித அன்பு குறித்த அடிப்படையான கருத்து என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. இது ஒரு மிகப் பெரிய வழித்திறப்பாகும்.

சிலர் குழந்தைகளை ஏதும் எழுதப்படாத வெற்றுப் பலகையாகப் பார்க்கிறார்கள். சமூகச் சூழலால் எப்படியும் மாற்றலாம் என்று நினைக்கிறார்கள். இது ஓர் அதீத நிலைப்பாடு கொண்ட தீவிரவாதமாகும். ஒரு வகையில் இது ஸ்டாலினிஸம். ஸ்டாலின் அப்படித்தான் சொன்னார். வேறு வகையில் சொன்னால் சமூக உள்ளீடு என்பது இல்லாமல் உயிரியல் இருப்பு என்பது மட்டும் இருக்கப் போவது இல்லை. பிறவிப் பண்புகள் என்பவை உயிரியல் வேறுபாடுகளையும் வலியுறுத்துவது. அது ஒரு வகையில் சில மக்களை அப்படியே மாற்றமில்லாமல் வைத்திருக்கச் செய்யும். உளவியல் என்பது ஒரு வகையான பயணம். பல்வேறு திசைகளைக் கொண்ட ஒரு நீண்ட பயணம் அது.

இப்போது கலாசாரம் குறித்து நிறையப் பேசப்படுகிறது. பின்நவீனத்துவம் கலாசாரத்தை ஐயப்பாடானது என்கிறது. கலாசாரம் என்பதற்கென்று தனியுரு ஏதும் இல்லை. அது மனிதர்களுக்கு இடையிலான ஊடாட்டத்தில் இருக்கிறது. நாளாக நாளாக அது மாறிக் கொண்டே இருக்கிறது. நீங்கள் அதில் பங்கெடுப்பதன் மூலம் அது மாறிக் கொண்டே இருக்கும். உங்களையும் மாற்றும். இது போன்றெல்லாம் கோட்பாடுகள் வருகின்றன. கலாசாரமும் சமூகமும் ஒரு மனிதனை எந்தளவு பாதிக்கின்றன அதன் பாதிப்பு நமது உணர்ச்சிரீதியான வளர்ச்சியில் எந்த மாதிரி இருக்கிறது இவற்றையெல்லாம் எவ்வாறு மாற்றுகிறது...

வைகாட்ஸ்கியைப் பற்றிச் சொன்னீர்கள். எரிக் ப்ராம் போன்றவர்கள் மனிதனின் உளவியலை விளக்குவதற்காக மார்க்சியத்தின் பொருளியல் சார்ந்த சமூகப் பரிமாணத்தையும் பிராய்டின் உளவியல் சார்ந்த பரிமாணத்தையும் எடுத்துக் கொண்டு அவை இரண்டுக்கும் இடையிலான ஓர் இணைவை உருவாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இப்போது லக்கான் போன்றவர்கள் சசூரின் மொழி ஆய்வுகளைக் கருவியாக எடுத்துக்கொண்டு மனிதனுடைய மன அடுக்குகளினூடே நுழைபுலங்களை வெளிக் கொண்டுவர முயல்கிறார்கள். இம்மாதிரியான வளர்ச்சிகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இது போன்ற விஷயங்கள் கலாசார ஆய்வுகள் விமர்சனக் கோட்பாடு மற்றும் மானுடவியல் போன்ற துறைகளில்தான் அதிகம் பேசப்படுகின்றன. உளவியல் துறையில் இவர்கள் குறித்து யாரும் கோட்பாட்டாக்கம் செய்வதெல்லாம் கிடையாது. பகுப்பாய்வு உளவியல் என்பது அறிவியல் முறைமையிலானதாக செயலறிவு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் சோதித்து நகலாய்வு செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள். இந்தக் கோட்பாடுகள் எல்லாம் நழுவுதிறம் கொண்டவை. லக்கானையோ ப்ராமையோ படித்துவிட்டு அவர்களுடைய கதையாடல்களை எல்லாம் படித்துவிட்டு மக்களுடைய வாழ்க்கை குறித்து பிரதி அடிப்படையிலான ஆய்வை மேற்கொள்கிறார்கள் அல்லவா அவர்கள்தான் இக்கோட்பாடுகளைப் பயன்படுத்துகிறார்கள். மன நோய்கள் போன்றவற்றுக்கான பயன்பாட்டில் இவற்றின் வரம்புகள் மிகக் குறுகியவை.

செயலறிவுவாதத்தை நீங்கள் அறிவியல்பூர்வமானது என்று சொல்கிறீர்கள் அல்லவா? அதற்கே உரித்தான முன்னபிப்பிராயத்தோடு அதை எவ்வாறு அறிவியல்பூர்வமானது என்று எடுத்துக் கொள்வது? சில விஷயங்களை ஆய்வு செய்ய ஒரு முறையியல் வேண்டும். கேள்விப்படிவ முறை என்பதை எடுத்துக் கொள்வோம். அதிலிருந்து நாம் சில முடிவுகளுக்கு வந்து சேரலாம். ஆனால் கேட்கப்படும் கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்னும்போது அவற்றில் முன்னபிப்பிராயம் என்பது இருக்கத்தானே செய்யும்? இதுவும் குறிப்பிட்ட கருத்தியல் சார்பில் இருந்து பிறப்பதுதானே?

அதையெல்லாம் உளவியலாளர்கள் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். ஏனென்றால் நீங்கள் ஆய்வு செய்ய முனையும்போதே ஒரு கோட்பாட்டைப் பரிசோதிக்கத்தான் முனைகிறீர்கள். அதைத்தான் பரிசோதித்தேன் அது சரிப்படவில்லை என்று ஒத்துக்கொள்ளக்கூடிய திராணி இருக்க வேண்டும். அதே சமயத்தில் இந்தக் கலாசார ஆய்வுகளுக்கும் உளவியலுக்கும் இடையில் எந்த ஆரோக்கியமான உறவும் இல்லை. பல்வேறு முறைகளைப் பயன்படுத்திப் பல்வேறு ஆய்வுகளை உளவியலாளர்கள் மேற்கொள்கிறார்கள். கலாசார ஆய்வுகள் போன்றவை ஒருகூறுக் குறுக்கல்வாதம் என்று ஒதுக்குகிறார்கள். ஓர் ஆய்வை ஒருவர்தான் செய்ய முடியும் அதே ஆய்வை இன்னொருவர் அப்படியே திருப்பிச் செய்ய முடியாது என்கிறார்கள்.

இப்போது பல்துறைக் கூட்டாய்வுகளின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு துறையில் நடக்கிற ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதற்கு அந்தத் துறை சார்ந்த பிற துறைகளில் நடக்கும் விஷயங்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக நீங்கள் சொன்னீர்கள் - ஒரு வருடைய உளவியலை பிராய்டிய அடிப்படையில் தன்மறிவாக வரும் விஷயங்களைக் கொண்டு வரையறுக்கலாம். இன்னொரு வகையில் பொருளாதார அம்சத்தைக் கொண்டு வரையறுக்கலாம். இப்போது மனித மரபுரேகைத் திட்டம் வந்த பிறகு மரபணுவைப் பார்த்தால் போதும் மனிதனை வரையறுக்கலாம் என்கிறார்கள். எந்தத் துறை ஆய்வுகளை எடுத்துக் கொண்டாலும் தத்துவம் உளவியல் மரபணுவியல் என்று பல்துறைக் கூட்டாய்வு நோக்கில் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில் ஒரு துறையில் இருப்பவர்கள் மற்றொரு துறைக்காரரை ஒருகூறுக் குறுக்கல்வாதி என்று சொல்வது மனித முழுமையைப் பற்றிப் புரிந்து கொள்ளும் முயற்சியில் ஒரு தடையாக இருக்கும் போலிருக்கிறதே!

நீங்கள் சொல்வது முக்கியமான விஷயம். இது ஒரு உலகளாவிய பிரச்சினையாக இருக்கிறது. குடிவரவு என்பதைப் புரிந்து கொள்ள பல்துறை நோக்கு தேவைப்படுகிறது. கலாசார வரலாறு பின்காலனியக் கோட்பாடு போன்ற விஷயங்களும் தெரிய வேண்டும். மனக் காயம் என்பதை எந்த மாதிரிச் சூழ்நிலையில் வைத்துப் புரிந்து கொள்வது என்பது தெரிய வேண்டும். புலம்பெயர்பவர்களின் மனக்காயம் என்பது இப்போதுள்ள மிகச் சிக்கலான பெரியதொரு பிரச்சினை. இந்த வகையில் பல்துறைக் கூட்டு அணுகுமுறை என்பது கட்டாயம் தேவைப்படுகிறது. அவ்வாறு செய்பவர்களுக்கு நிறையச் சவால்களும் இடர்வாய்ப்புகளும் இருக்கின்றன. முதலில் உங்களை ஒரு துறையில் நிலைநிறுத்திக் கொண்டுதான் பல்துறை ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது போல நிலைமைகள் இருக்கின்றன. பல்துறை அணுகுமுறை வேண்டும் என்பது இப்போது எல்லோராலும் ஒருமித்துப் பேசப்பட்டு வருகிறது. உளவியலாளர்கள் சமூகவியலாளர்கள் வரலாற்றாளர்கள் போன்றவர்கள் ஒத்துழைத்து ஒரு ஒரு பிரச்சினையை ஆராய வேண்டும் என்பது உணரப்பட்டு வருகிறது. இவர்கள் நெருங்கி வருவதற்கு நிறையத் தடைகள் இருக்கின்றன. காரணம் அவரவர் தத்தமது துறை சார்ந்த வரம்புகளோடு வரையறுக்கப்பட்ட பரப்புகளுக்குள்ளாகத்தான் செயல்படுகிறார்கள். அடுத்த பத்தாண்டுகளில் பல்துறை அணுகுமுறைதான் பெரிய விஷயமாக இருக்கப் போகிறது.

நோம் சோம்ஸ்கி ஒரு கணிதவியல் கருத்தரங்கில் பேசப் போனது பற்றிக் கேள்விப்பட்டேன். அவர் மொழியியலாளராக இருந்தாலும் தான் பேசப் போகும் விஷயத்தில் அறிவு இருந்ததனால் அவர் அங்கீகரிக்கப்பட்டார் என்று அறிந்தேன். இது மிகவும் முக்கியமாகப் படுகிறது. சில நாட்கள் முன்பு இலண்டனில் இருந்து வெளியாகும் இன்டிபன்டண்ட் தினசரியில் ஒரு சிறிய பெட்டிச் செய்தியைப் பார்த்தேன். சோம்ஸ்கி இதுவரையிலான தனது மொழியியல் படைப்புகளை மறுத்தொதுக்கி விட்டார் என்பதுதான் அந்தச் செய்தி. அது குறித்து மேலும் அறிந்துகொள்ள இணையத்தில் தேடிப் பார்த்தேன் நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன். அதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவருடைய மொழியியல் படைப்புகளுக்கும் அரசியல் படைப்புகளுக்கும் எந்தவிதமான இணக்கமும் இல்லை என்பது எனக்குள் உறுத்திக் கொண்டேதான் இருந்து வந்திருக்கிறது.

நீங்கள் சொல்கிறபடி மொழியியல் அரசியல் தொடர்பாக தனக்குள் கோட்பாட்டளவில் இருந்த முரண்பாட்டை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். மேனுபேக்சரிங் கன்சன்ட் வீடியோவில் அதைச் சொல்லியிருக்கிறார்.

இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மரபணு ஆய்வுகள் உளவியல் ஆய்வுகளை எவ்வாறு பாதிக்கும் என்று நினைக்கிறீர்கள்? அந்த ஆய்வுகள் இப்போது மனிதனையே உருவாக்கும் முயற்சியில் இருக்கின்றன. ஆட்டின் படியெடுப்பு இதயம் உட்பட மனிதனின் உறுப்புகளைப் படியெடுத்தல் இப்போது மனிதனையே அவ்வாறு படியெடுத்தல் என்று அந்த ஆய்வு போய்க் கொண்டிருக்கிறது...

மரபணுவியலுக்கு நான் அழுத்தம் தருவதில்லை. ஆனால் அது பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொல்லலாம். அது குறித்த அறிக்கைகளைப் பார்த்தீர்களானால் மிகவும் கைப்போக்காக வெளியிட்டிருப்பார்கள். ஏதாவதொன்று மரபுக் கூறானது என்று சொன்னால் அது மாற்றவியலாதது என்று பொருளல்ல. மரபணுவியலாளர்களிடம் கேட்டால் மரபணு - சூழல் என்ற இருபிரிவாக்கமே தவறானது என்று சொல்வார்கள். சூழலும் மரபணுவும் சேர்ந்துதான் இருக்கிறது. இருக்கின்றன. மரபணு என்பது வெற்றிடத்தில் இருந்து வந்துவிடவில்லை. மரபணுவுக்கும் சூழலுக்கும் இடையிலான ஊடாட்டம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தக் கேள்வி எனக்கு ஏன் முக்கியமாகப் படுகிறது என்றால் இப்போதுள்ள நவீன நாஸிகள் இன நிற வேறுபாடுகள் என்பது இயற்கையிலேயே உள்ளவை அவற்றை மாற்ற முடியாது என்கிறார்கள். இதையே இந்தியச் சூழலில் வைத்துப் பார்த்தால் பிராமணர் பிராமணரல்லாதோர் தலித்துகள் தலித்தல்லாதோர் என்று அமையும். பிராமணன் திருந்தவே மாட்டான் என்று பெரியாரியர்கள் மட்டுமல்ல மார்க்சியர்களும் கூட சொல்லக் கேட்டிருக்கிறேன். இது ஒரு வகை உயிரியல் தீர்மானவாதம். ஒரு வகை மரபு அடிப்படைவாதம் என்று தோன்றுகிறது. அதே போல் தலித்துகளின் வாழ்நிலையை இந்த உயிரியல் தீர்மானவாதத்தை வைத்து விளக்கம் கூறி அவர்கள் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்தலாம்...

இது ஒரு முக்கியமான கேள்வி. நீங்கள் சொல்வது சரி. ஏனென்றால் மரபணு ஆய்வுகளின் தோற்றமூலங்களைப் பார்த்தால் இன மேம்பாட்டியல் இயக்கம் போன்றவை எல்லாம் அவற்றோடு தொடர்பு கொண்டதாய் இருக்கும். அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் இன வேறுபாடுகளை நியாயப்படுத்துவதற்கு அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனால் மரபுரேகைத் திட்டம் பற்றியெல்லாம் எச்சரிக்கை கொண்ட உயிரியலாளர்கள் இருக்கிறார்கள். ஆதிக்கக் குழுவின் பண்புகளை இதை வைத்து நியாயப்படுத்தலாம். அதே போல் அடக்கப்பட்ட குழுவும் தங்கள் நிலையை இதை வைத்து வரையறுக்கலாம். முன்பு அடையாளத்துக்கு இரத்தம் ஓர் உருவகமாக இருந்தது. அதுவே இப்போது மரபணுவாக மாறிவிடும். மரபணுவின் உள்ளாற்றல் என்பது வினைமுறையானதே தவிர இது உங்களிடம் இருக்கிறது இல்லை என்பது போன்றதல்ல. அது தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பது. சூழலோடு தொடர்ந்து ஊடாட்டம் கொண்டபடி இருப்பது. மரபணுவியலை தவறான முறையில் கையாள்வதால் நிலவி வரும் உறவுகள் எல்லாம் பிரச்சினைக்கு உள்ளாகும். மரபணுவியல் என்பதை அறிவியலாளர்கள் எவ்வாறு விளக்குகிறார்கள் மக்கள் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பதற்கு இடையில் நிறைய இடைவெளி இருக்கிறது.

அப்புறம் கருத்தியல் என்பது. மரபணுவியல் கண்டுபிடிப்புகளை அடக்கப்பட்ட குழுவும் பயன்படுத்தலாம் ஆதிக்கக் குழுவும் பயன்படுத்தலாம். அடுத்தது ஆய்வுகளின் அறிக்கையிடல் என்பது. சரியான முறையில் அறிக்கைகளை வெளியிடாமல் இருக்கிறார்கள். வெள்ளை கறுப்பு இனங்களுக்கு இடையில் வளாதார வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன. கறுப்பின மக்கள்கூட சூழலியல்வாதிகளாக இருப்பதும் ஒரு காரணம். ஆகவே கண்டுபிடிப்புகளை எவ்வாறு அறிவிக்கிறார்கள் வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் மக்கள் இதைச் சரியாகப் புரிந்து கொள்கிறார்களா? நிலவிவரும் சமூக அமைப்புமுறையைப் பாதுகாக்கப் பயன்படுத்துகிறார்களா சமூக மாற்றத்துக்குப் பயன்படுத்துகிறார்களா என்பதையெல்லாம் நாம் பார்க்க வேண்டும். இதையெல்லாம் நாம் கோட்பாட்டாக்கம் செய்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மரபணுவும் சூழமைவு இல்லாமல் தனித்து இருக்கவே முடியாது. இந்த விவாதத்தை எல்லாம் தாண்டி நாம் மனிதகுல மரபைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் மனித மரபுரேகைத் திட்டம் எல்லாம் வருகிறது. நாம் இதையெல்லாம் கோட்பாட்டாக்கம் செய்யாமல் விட்டோம் என்றால் அது தவறான மனிதர்களின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

காமத்தை நாம் அடிப்படை இயல்புணர்ச்சி என்கிறோம். இப்போது அரசியல் உரையாடல்களில் வன்முறை ஓர் அடிப்படையான இடத்தை வகிக்கிறது. வன்முறையினால்தான் வரலாறு கட்டப்படுகிறது என்று சொல்கிறார்கள். புரட்சிகர இயக்கங்கள் பலவற்றில் இது நியாயப்படுத்தப்படுகிறது.  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இணைவிழைச்சு ஒரு முக்கியமான அம்சமாக இருப்பது போல சமூக மாற்றத்திலும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதிலும் வன்முறை ஓர் அடிப்படை உணர்ச்சியாக விளங்குகிறது என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் சொல்லப் போனால் வன்முறை சார்ந்த சாகச உணர்ச்சி மனிதனுடைய இயல்புகளில் ஒன்று என்பது போலவும் சொல்லப்படுகிறது. ஆகவே வன்முறை என்பது மனிதகுல வரலாற்றில் வழிவழியாயப் பெற்று வந்த மரபியல்பு என்று நினைக்கிறீர்களா?

கூர்ப்பு உளவியலாளர்கள் இது குறித்து நிறைய ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். தாக்குநடத்தை என்பது மாற்ற முடியாதது என்றோ குறைக்க முடியாதது என்றோ அவர்கள் நினைக்கவில்லை. தாக்குதலில் ஈடுபாடில்லாத சமூகங்கள் பற்றிய ஆய்வுகளும் இருக்கின்றன. இயற்கை என்பதை நாம் ஒரு சௌகரியமான அடையாளச் சின்னமாகப் பயன்படுத்திக் கொள்கிறோம். நம்முடைய நடவடிக்கைகள் மேல் நமக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது என்பது போன்ற ஓர் அவதானிப்பு இருக்கிறது. தாக்குநடத்தைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம் ஏற்பட்டு தாக்குதலை ஓர் உத்தியாகப் பயன்படுத்தலாம். இவை எல்லாவற்றையும் இடையீடு செய்ய முடியும். மருந்து கொடுத்துச் செய்யலாம். ஆலோசனை முறைகள் மூலம் செய்யலாம். மனிதனுக்கு மனிதன் என்ற இடையுறவு நிவையிர் குடும்பங்களில் காதலுறவில் வன்முறை இருப்பதற்குப் பல காரணிகள் தாக்கங்கள் இருக்கின்றன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வன்முறையை ஒரு கோட்பாடாக உருவாக்கிக் கொண்டால் அப்புறம் அதைத்தான் பாவிப்பீர்கள். வன்முறைக்கு உள்ளாகிறவரும் அதை ஒரு கோட்பாடாக உள்வாங்கிக் கொண்டாரானால் அவரும் அப்படித்தான் நம்புவார். இந்தச் சூழலில் வளரும் குழந்தை இதை இலட்சியமாக்கிக் கொள்ளும். அதையே ஒழுக்க நெறியாகவும் எடுத்துக் கொள்ளும். பிறகு பார்த்தால் அது குழந்தையின் இயல்பாகத் தோன்றும். இப்படி ஒரு நச்சு வளையமாக இந்தக் கோட்பாடு சுற்றிக் கொண்டு இருக்கிறது. ஆகவே ஜனநாயக ரீதியாக நாம் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதில் அல்லது வாதிட்டுத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு பண்பாட்டை உருவாக்குவதில்தான் இப்போது உளவியலாளர்கள் அக்கறை செலுத்துகிறார்கள். உள்குடும்ப ஜனநாயகம் என்று இதைச் சொல்லலாம். பேசித் தீர்வு காண்பதற்கான கலாசாரத்தை உருவாக்கும் பட்சத்தில் வன்முறை என்பது ஒரு பிரச்சினையாக இருக்காது.

வன்முறை குறித்த அரசியல் உரையாடலைப் பார்க்கும்போது சுய மறுப்பு என்பது வன்முறைக்கான ஒரு காரணம் என்று பெனான் கூறுகிறார். அல்ஜீரியன் என்று ஓர் அடையாளம் எதிரியினால் கட்டமைக்கப்பட்டு விட்டதென்றால் இயல்பாக பிரெஞ்சு அடையாளத்தைக் கட்டமைக்கிறவன் அல்ஜீரியனை பௌதிக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அவர்களது முன்னிலையில் மறுக்கிறான். இந்த சுய மறுப்புக்கு எதிராகத்தான் தவிர்க்கவியலாமல் உளவியல் சார்ந்த உடல் சார்ந்த வன்முறை வருகிறது என்கிறார் அவர்...

இது ஒரு வகையான விளக்கம். பல்லின அடையாளம் என்பது இப்போது ஒரு முக்கியமான பேசுபொருளாய் இருக்கிறது. பின்காலனிய ஆய்வுகளில் பார்த்தால் திணிக்கப்பட்ட அடையாளம் என்பது வன்முறைக்கு இட்டுச் செல்வது என்ற பிரச்சினை பேசப்படுகிறது. அதற்கான சாத்தியம் நிறைய இருக்கிறது. மேலும் இப்படியான வன்முறை மூலம் தங்களுடைய செயலாண்மையை நிறுவியிருக்கிறார்கள். வெற்றிகரமான சிலர் இரண்டு அடையாளங்களையும் பிரச்சினையில்லாமல் கடந்து போவதன் மூலம் எந்த அடையாளமும் இல்லாமல் இருக்கிறார்கள். இடைப்பட்ட நிலை என்னவென்றால் இப்படித் திணிக்கப்பட்ட அடையாளங்கள் ஓர் அடையாளச் சிக்கலை உருவாக்குகிறது. இந்த அடையாளச் சிக்கலைப் புரிந்து கொண்டு அவனுடைய உளவியல் வளர்ச்சியையும் இணைத்துப் பார்க்க வேண்டும். இதைப் போன்று சமூகவியல் ஆய்வுகள்தான் இருக்கின்றன் உளவியல் ஆய்வுகள் எதுவும் இல்லை.

வன்முறை தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்வதென்பது ஒருபுறம். ஆனால் விரும்புகிறோமோ இல்லையோ வன்முறை இருக்கிறது. தங்கள் மேல் வன்முறை திணிக்கப்படுவதால் அதற்கு எதிராக வன்முறையைப் பாவிக்க வேண்டியிருப்பது ஒரு பிரச்சினையாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை அரசியல் ரீதியான வன்முறையை வாழ்முறையாக ஏற்றுக் கொண்டுவிட்டு அதற்குப் பிறகு சுமுகமான ஒரு காலத்தில் வன்முறை உணர்வில்லாமல் வாழ முடியுமா என்பது அரசியல் வன்முறை தொடர்பான விவாதங்களில் ஓர் அம்சமாக இருக்கிறது. சோவியத் யூனியன் அனுபவத்திலிருந்து பின்புரட்சிச் சமூகங்கள் வரை இந்த விவாதம் முன்வைக்கப்படுகிறது. இப்படியான வன்முறை தொடர்ந்து உளவியலில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வுகள் இருக்கின்றனவா?

உளவியலில் இதுவரை அவ்வாறான ஆய்வுகள் இல்லை. ஆனால் ஒரு வன்முறைச் சூழலில் அந்தக் கலாசாரத்தில் வாழ்ந்து அதன் கோட்பாடுகள் அதற்கென்று இருக்கிற அறநெறிகளுக்குள் இருந்து ஒருவர் மீறி வெளிவருவது மிகக் கடினம். அந்தக் கலாசாரத்துக்குள்தான் நீங்கள் சமூகமயப்படுத்தலைச் செய்தாக வேண்டும். அந்த இயக்கங்களில் ஜனநாயக ரீதியான கலாசாரம் இருக்கிறதா உள்ஜனநாயகம் இருக்கிறதா இரண்டு அறிவுஜீவிகள் என்ன மாதிரி அறிவுப் பரிமாற்றம் கொள்கிறார்கள் என்பதையெல்லாம் பொறுத்துத்தான் மாற்றம் சாத்தியமா என்ற விஷயத்தைச் சொல்ல முடியும். பாலஸ்தீன இயக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரசியல் பிரிவு இருக்கிறது. மற்றொன்று களத்தில் சண்டையிடுகிறது. இது மாதிரியான தகவல் பரிமாற்றம் கொண்ட ஒரு சூழல் உருவாகியிருக்க வேண்டும். இது முக்கியம். இது பற்றி முறைப்படியான எந்த ஆய்வுகளும் இல்லை. வரலாற்றாளர்களும் உளவியலாளர்களும் சேர்ந்து இது தொடர்பாக ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.

இலக்கியத்துக்கும் உளவியலுக்குமான உறவு பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். தாஸ்தயாவ்ஸ்கியின் படைப்புகளை எடுத்துக் கொண்டால் அவருடைய பாத்திரங்கள் அனைவருமே உளவியல் ரீதியில்தான் உருவாக்கப்பட்டிருப்பார்கள். பெரும்பாலான பாத்திரங்களுக்குத் தங்கள் நடவடிக்கைகளின் மேல் தீர்மானகரமான எந்த விதப் பிடிப்பும் இருப்பதில்லை. கரமஸோவ் பிரதர்ஸ் எடுத்துக் கொண்டாலும் சரி க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட் எடுத்துக் கொண்டாலும் சரி இப்படித்தான் இயங்குவார்கள் என்று அந்தப் பாத்திரங்களை நாம் அனுமானிக்க முடியாது. இம்மாதிரியான இலக்கியங்கள் மனித உளவியலைப் புரிந்து கொள்வதில் எவ்வாறு உதவியிருக்கிறது என்று உங்களுடைய ஆங்கில தமிழ் இலக்கிய அனுபவத்திலிருந்து சொல்ல முடியுமா?

பிராய்டின் ஆய்வுகளில் இலக்கியத்தின் தாக்கம் நிறைய இருக்கிறது. தாஸ்தயேவ்ஸ்கியை அவர் மேற்கோள் காட்டுகிறார். அதிலிருந்து சில விளக்கங்கள்தான் கிடைக்குமே தவிர ஒரு துறையாக உளவியலுக்கென்று தனி ஒழுங்கும் ஆய்வுவினாக்களும் இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலக்கியம் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது பொருள்விளக்க ஆய்வுகள் என்று ஒரு பகுதி இருக்கிறது. இதில் மனிதச் செயல்பாடு என்று நிறையப் பார்க்கிறார்கள். பொருள்விளக்க ஆய்வில் ப்ராங்கல் என்று ஒருவர் இருக்கிறார். ஜெரோம் ப்ரூனர் இருக்கிறார். தாஸ்தயாவ்ஸ்கியில் இருந்து காப்கா டோனி மாரிசன் என்று இவர்கள் தேர்ந்தெடுத்துப் பேசுகிறார்கள். ஆட்டோபயாக்ராப் மெமரி என்று ஒரு புதுத்துறையே வந்திருக்கிறது. அதில் முக்கியமான சுவாரசியமான படைப்பு என்னவென்றால் எப்படி வாசனையுணர்வை வைத்து வாழ்க்கையின் பல நினைவுகள் நமக்கு வருகின்றன என்பது. இப்படி இலக்கியத்துக்கும் உளவியலுக்கும் இடையில் ஓர் ஆரோக்கியமான தொடர்பு வந்திருக்கிறது. தமிழில் நகுலன் லா.ச.ரா. புதுமைப்பித்தன் போன்றவர்கள் நனவோடை என்ற அளவில் எழுதியிருக்கிறார்கள். தாஸ்தயேவ்ஸ்கி மாதிரி எழுத முயற்சிகள் இருக்கின்றன. உளவியல் தொடர்பான பிரதிகளே இன்னும் மொழிபெயர்க்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படாத சூழலில் உளவியலின் கோட்பாட்டுத் தாக்கத்துக்கு நிறுவனரீதியான ஆதரவு இல்லாத சூழலில் இதன் தாக்கத்தை அதிகம் எதிர்பார்ப்பது கடினம்.

நீங்கள் இப்போது என்ன ஆய்வில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?

என்னுடைய ஆய்வு பாலின உளவியல் பற்றியது. குழந்தைகள் எவ்வாறு பாலின வேறுபாடுகளைப் புரிந்து கொள்கிறார்கள் ஆண்கள் என்றால் இப்படி நடந்து கொள்வார்கள் பெண்கள் என்றால் இப்படி நடந்து கொள்வார்கள் என்பதை எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் எந்த மாதிரிச் சூழலில் அதைப் புரிந்து கொள்கிறார்கள் வௌவேறு வயதுக் காலத்தில் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதைப் பற்றிய ஆய்வு செய்து வருகிறேன். தமிழ்நாட்டிலும் அமெரிக்காவில் சிலிக்கான் வேல்லியில் இருக்கிற தமிழர்களுக்கு இடையிலும் இந்த ஆய்வைச் செய்து வருகிறேன். தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மதுரை சென்னை ஆகிய பகுதிகளில் செய்கிறேன். ஒரே இடத்தில் நகரத்தில் மட்டும் செய்யாமல் சிறிது உள்ளே சென்று கிராமப் பகுதிகளிலும் செய்கிறேன். ஆண் என்பவன் பெண்ணைப் போல நடந்து கொள்ளலாம் ஆனால் பெண் என்பவள் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள். அந்த இயல்பை மிகவும் தனிநபர்ப்பட்டதாகப் பார்க்கிறார்கள். இது ஒரு சாதாரணமான ஆதாயமடைதல் என்பதில் இருந்து வயதாக ஆக ஒரு கருத்தியல் உந்தமாக வளர்கிறது. அதுதான் என்னுடைய அடிப்படையான வாதம். ஆணுக்கொரு நியதி பெண்ணுக்கொரு நியதி. இந்த நியதி ஐந்தாறு வயதிலேயே வந்துவிடுகிறது. அது பூதாகரமாகப் பெருகிக் கொண்டே வந்து ஒரு கோட்பாடாக மாறி நம்முடைய ஒழுக்க உலகத்தையே வரையறை செய்கிறது. இது முதல் ஆய்வுத் திட்டம். இரண்டாவது ஆய்வுத் திட்டத்தில் அதிகாரம் என்ற விஷயம் நம்மை எப்படி பாதிக்கிறது என்று பார்க்கிறேன். அதை பரிசோதனை முறையில் பார்க்க வேண்டும். இன்னொரு முறையாக அமைப்பியல் ரீதியாகப் பார்க்க வேண்டும். அமைப்பியல் ரீதியாக என்பது மேல் ஜாதிக்காரர்கள் கீழ் ஜாதிக்காரர்கள் என்று பிரிவினையைப் பற்றியது. ஜாதி என்பது உடலியல் ரீதியாக நாம் பிறக்கும்போதே வருகிறதா நடைமுறைப் பழக்க வழக்கங்களில் வருகிறதா அதாவது சமூகரீதியாகக் கட்டமைக்கப்பட்ட அடையாளமாக வருகிறதா என்பது கேள்வி.

இந்தக் கேள்வியைக் கேட்கும்போது பிராமணர்கள் என்ன சொன்னார்கள் என்றால் ஜாதி என்பது அடிப்படையில் இயற்கையிலேயே உயிரியல் ரீதியாகவே வருகிறது என்று. ஆனால் தலித்துகள் என்ன சொன்னார்கள் என்றால் அது வரலாற்றுப் பூர்வமானது சமூகத்தால் கட்டப்பட்டது சமூகத்தால் கட்டப்பட்ட போதும் மாற்ற முடியாதது ஒரு முறை அது வந்துவிட்டால் மாற்ற முடியாது என்று. ஜாதி குறித்து இரண்டு விதமான அணுகுமுறைகள். ஆனால் மாற்ற முடியாது என்ற கருத்து இருவருக்கும் இருக்கிறது. ஆதிக்கக் குழுவும் அடக்கப்பட்ட குழுவும் வேறு வேறு வகைகளில் பார்க்கின்றன. ஒன்று உயிரியல் ரீதியானது என்கிறது. மற்றது சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது என்கிறது ஆனால் மாற்ற முடியாததாகப் பார்க்கிறது. இது மிகவும் ஆர்வத்ததைத் தூண்டும் ஒரு மனக் கட்டமைப்பு. இது இயற்கையானது ஆகவே உயிரியல்ரீதியானது என்கிறது ஆதிக்கக் குழு. இனமேம்பாட்டியலும் அப்படித்தானே கூறுகிறது.

ஆனால் அது உயிரியல் ரீதியானது அல்ல. நாம் பெற்றிருப்பது. அது ஓர் அரசியல் திரட்டு. எடுத்துக்காட்டாக தலித் அடையாளம் என்று சொல்கிறோம். ஜாதி பற்றிய உயிரியல் கருத்து ஒழிக்கப்பட வேண்டும். அதே சமயத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடையாளம் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். நாராயணப் பறையர் என்று போடும்போது அது உண்மையிலேயே வலுவூட்டுவதாக இருக்கிறது. அதுவும் கூட ஓர் எதிர்ப்பு நடவடிக்கையே.

ஓர் உளவியலாளர் என்ற அளவில் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் சாதிய நீக்கம் என்பதுதான் முக்கியமான விஷயமாகத் தோன்றுகிறது. அதுதான் ஒரு நாகரிகமான சமூகத்தை நோக்கி நம்மைக் கொண்டு போகும். சாதிய நீக்கம் என்பது என்ன மாதிரி உருவாகப் போகிறது? ஒரு சமூக நிறுவனம் என்ற அளவில் அதை நீக்கம் செய்வது என்பது ஒரு வகை. அப்படி நிகழப் போகிறதா? அல்லது சாதியப் பெருமிதம் என்பதை அனைவருக்குமானதாக ஆக்குவது - பிராமணன் தன் சாதி குறித்துப் பெருமிதம் கொள்வது போலவே தலித்தும் தன் சாதி குறித்துப் பெருமிதம் கொள்வதன் மூலம் ஏற்படும் சாதியச் சமநிலை என்ற அளவில் சாதிய நீக்கம் என்பது நிகழுமா? இரண்டாவது முறைதான் செயல்படும் என்றால் சாதி என்பது என்றுமுளதாகத்தானே இருக்கும்!

சாதிய நீக்கம் செய்வது என்றால் அப்படி எங்காவது தொடங்க முடியுமா என்பது ஒரு பெரிய பிரச்சினை. ஒரு நல்ல மாற்றாக இருப்பது பல்கலாசாரவாதம். நான் தொகுத்த ஒரு நூலில் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம். கலாச்சாரக் குழுக்களுக்குள் அவர்களுடைய அடையாளம். இனக் குருட்டுச் சமூகம் என்று அமெரிக்காவில் சொல்வார்கள். ஓர் இனமற்ற சமூகம். ஒவ்வொருவருக்கும் வரலாறு இருப்பதால் அடையாளங்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாளங்கள் ஆக வேண்டும். ஒவ்வொரு தலைமுறைக்கும் வரலாறும் அங்கீகரிக்கப்பட்ட அடையாளமும் எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்துத்தான் இந்தக் குழுக்களைப் பற்றிய அடையாளங்கள் எதிர்காலத்தில் எப்படி அமையும் என்று சொல்ல முடியும். பல்கலாசாரம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இது வெறுமனே அடுத்தவர்களை அங்கீகரிப்பது என்பது மட்டுமல்ல. அவர்களுடையதேயான படைப்புகளை அங்கீகரிப்பது என்பதும் முக்கியம். குறிப்பாக நாட்டுப்புற அல்லது வட்டார வழக்கு என்பது. அவையெல்லாம் அறிவுத் தொகுப்புகள். அந்த மரபுகள் எல்லாமே அறிவுத் தொகுப்புகள். அவை எல்லாம் ஏற்புமுறைமை கொண்டவையாக்கப்பட வேண்டும். அதே போல் சாதி இருப்புநிலைகள் என்பன ஏற்புமுறைமையற்ற மரபறிவு வடிவங்களாகும். செவ்வியம் என்று சொல்லப்படும் அறிவுத் தொகுப்புக்கு இருக்கும் மரியாதை நாட்டுப்புற அறிவுத் தொகுப்புக்கும் ஏற்பட்டால் அந்த அங்கீகாரமே ஒரு புதிய சமூகத் திட்டத்துக்கான முதல் நடவடிக்கையாக இருக்கும்.

பெருமரபுக்கு எதிராக சிறுமரபு என்ற இருபிரிவாக்கம் எல்லாம் இப்போது பிரச்சினை இல்லை. சாதி அமைப்பு எல்லாம் ஒரு மரபான அறிவுத் தொகுப்பு என்று நாம் அங்கீகரித்தால் கலாசார உருவாக்கத்தில் அவர்களுடைய தகுதியுரிமை வாய்ந்த பங்கேற்பை நாம் அங்கீகரித்தவர்களாவோம். இப்போது நடந்து கொண்டிருப்பது ஓர் எதிர்வாதப் போராட்டக் காலம். அது நடந்து கொண்டிருக்கிறது. இயக்கங்கள் தனித்தனிச் சங்கங்களாக ஏற்பட்டிருக்கின்றன. அந்தச் சங்கங்கள் என்ன மாதிரி பங்கேற்புக்கு வரப் போகின்றன என்ன மாதிரி சமூக மாற்றங்கள் ஏற்படப் போகின்றன என்பதைப் பொறுத்து நிலைமை மாறும்.

நீங்கள் இலங்கைத் தமிழர்களிடத்தில் கொஞ்சம் உளவியல் ஆய்வுகள் செய்வதாக தனிப்பட்ட உரையாடலில் சொன்னீர்கள். என்ன விதமான ஆய்வுகளை மேற்கொள்கிறீர்கள்? எந்தப் பகுதியில் உங்களுடைய ஆய்வுகளை மேற்கொண்டீர்கள்?

என்னுடைய ஆய்வின் இன்னொரு பகுதி புலம் பெயர்ந்தவர்கள் பற்றியது. புலம் பெயர்ந்தவர்களுக்கு உளவியல் ரீதியாக என்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது இந்த ஆய்வு. புலம் பெயர்ந்தவர்களைப் பற்றிப் படிக்கும்போது எந்தக் கலாசாரத்திலிருந்து வருகிறார்களோ அந்த ஆய்வுகளைப் படித்து இங்கிருக்கும் குடியேறிகள்  எப்படி நடந்து கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்கிறேன். ஆனால் சில நாட்கள் கழித்து இந்தப் புலம் பெயர்ந்தவர்களுக்கும் அந்த நாட்டுக் கலாசாரத்துக்கும் ஏற்படும் இடைவெளி கவனிக்கத்தக்கது. இதைப் பற்றிக் கோட்பாட்டாக்கம் செய்யும்போது இந்த இடம் பெயர்ந்தவர்களுடைய வாழ்க்கை என்ன மாதிரி தனிச் சிக்கல்களோடு இருக்கிறது அந்தத் தனிச் சிக்கலைப் புரிந்து கொள்வதற்கு இடம் பெயர்ந்ததற்கான காரணம் எந்த வகையான அகதிகளாக வருகிறார்கள் சுயத்தேர்வோடு வருகிறார்களா வரும்போது என்ன மாதிரியான சிக்கல்களோடு வருகிறார்கள் என்ன மாதிரியான வளாகத்திலிருந்து வருகிறார்கள் என்ன மாதிரி சித்திரவதைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்ன மாதிரியான மனக்காயங்களோடு இருக்கிறார்கள் இவையெல்லாம் அவர்கள் மனநிலையை எப்படிப் பாதிக்கின்றன அது எப்படி அவர்களுடைய ஆண்-பெண் உறவுகளைப் பாதிக்கிறது குடும்பத்தில் இருக்கிற சிக்கல்கள் குழந்தை வளர்ப்பு பெற்றோர்களை நடத்தும் முறை என இவை எல்லாவற்றையும் கவனம் குவித்து என்னுடைய ஆய்வைச் செய்கிறேன்.

இதுவரையில் அவர்களோடு கொஞ்சம் பழகியிருந்திருப்பீர்கள். அதில் உங்களுடைய கண்டுபிடிப்புகள் என்ன மாதிரி இருந்தது? அவர்களுடைய குழந்தை வளர்ப்பு சித்திரவதை அனுபவம் அவர்கள் கொண்ட எதிர்வன்முறை என்ன மாதிரி பிரதிபலிக்கிறது? அவர்களுடைய பாலுறவு வாழ்க்கை தற்கொலை விகிதம் எல்லாம் என்ன மாதிரி இருக்கின்றன என்று சொல்ல முடியுமா?

என்னுடைய ஆய்வுகளின் ஆரம்பநிலை அம்சங்களில் இருந்து சில விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன். டொரோண்டாவில் தற்கொலை விகிதம் அதிகமாக இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும்போது சின்னச் சின்னக் குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டே தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆண்-பெண் உறவில் பெரிய விரிசல் இருக்கிறது. பெண்களுக்கு இரட்டைச் சுமை என்று சொல்லலாம். ஒன்று அவர்கள் பண்பாட்டைத் தாங்கி எடுத்துச் செல்பவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் புதுக் கலாசாரத்தில் அவர்களுக்கான பாத்திரம் மாறி இருக்கிறது. வெளியில் சென்று வேலை செய்ய வேண்டியிருக்கிறது. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. பழைய மரபான கடமைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. குழந்தைகளைக் காப்பாற்றி கணவனுக்குச் சமைத்துப் போட்டு தாங்களும் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த மாதிரி ஓர் இரட்டைச் சுமை இருக்கிறது. அதைப் பற்றி அவர்கள் நிறையப் பேசுகிறார்கள். ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெண்களை அடித்தல் குழந்தைகளை அடித்தல் அதிகமாகி இருக்கிறது. அவர்களுடைய வன்முறையின் தாக்கம் அவர்களது மனநிலையை நிறையப் பாதித்திருக்கிறது. பல விஷயங்களில் இவர்கள் வன்முறையை ஒரு சாதகமான ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த மாதிரியான சூழலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அதிகமாகப் பெண்களாக இருக்கிறார்கள். தூக்கமின்மை அதீதக் களைப்பு போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கு அதிகமாக இருக்கின்றன. கணவனோ நீ சும்மா படுத்துக் கொண்டிருக்கிறாய் என்று சண்டை போடுகிறார். உளவியல் என்றாலே நமக்கு ஓர் எளிமையான நினைப்பு இருக்கிறது. அது பைத்தியத்துக்கான வைத்தியம் என்பது மாதிரி. எலுமிச்சம்பழம் தேய்த்துக் குளித்தால் போதும் என்ற அளவில்தான் உளவியல் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. அதனால் இவர்கள் உளவியல் மருத்துவர்களை நாடுவது இல்லை.

உறுத்துகிற இன்னொரு விஷயம் என்னவென்றால் கணினியியல் மருத்துவம் போன்ற படிப்புகளுக்குத்தான் குழந்தைகளை அனுப்புகிறார்கள். சமூக அறிவியல்களைப் படிக்க நாம் விரும்புவதில்லை. இந்த மாதிரியான ஓர் அவலத்துக்கு ஒரு சமூகம் ஆட்படும்போது அதைப் பற்றிக் கோட்பாட்டாக்கம் செய்வதற்கோ நேரடியாக உதவச் செல்வதற்கோ ஆட்கள் இல்லை. டொரோண்டோவில் இரண்டு இலட்சம் தமிழர்களுக்கு உளவியலாளர்கள் என்று பார்த்தால் மூன்று பேரோ நான்கு பேரோதான் இருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் வன்முறை பல இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளை அடிப்பது அதிகமாக இருக்கிறது. 80 - 85 குழந்தைகள் கனடிய அரசாங்கப் பொறுப்பில் இருக்கின்றனர். என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை முதல் கட்டமாக நான் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். அப்புறம்தான் இடையீடு செய்ய வேண்டும். கனடிய தேசிய மக்கட்தொகையை ஏனைய குடியேறிகளோடு ஒப்பிட்டுத்தான் எனது விவரங்களைச் சொல்கிறேன். இது தொடர்பாக ஒரு கருத்தரங்கு நடந்தது. அதிலிருந்துதான் நான் இந்த விவரங்களைப் பெற்றேன். பெண்கள் தனியாக மகளிர் மட்டும் என்று நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கான பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறார்கள். அதோடு புதுக் கலாசாரத்தில் குழந்தைகளை எப்படிப் பள்ளிக்கு அனுப்புவது அவர்களுக்கு எந்த விஷயங்களைச் சொல்லித் தருவது என்பது போன்ற பிரச்சினைகளும் இருக்கின்றன. இவையல்லாமல் டோரோண்டாவின் பள்ளிகளில் விடலைப் பருவத்திலேயே வன்முறைக் குழுக்கள் என்பது போன்ற பிரச்சினைகளெல்லாம் இருக்கின்றன. ஒழுங்காகப் படியாமல் நடக்கிற அந்தப் பண்பாடுகள் எல்லாம் வந்து சேர்ந்திருக்கின்றன. எந்த முறையில் இந்தப் போக்குகளை மாற்ற முடியும் எவ்வாறு மாற்றினால் இவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.

பொதுவாக மனிதனுடைய வளர்ச்சியில் அவனது மேம்பாடு கருதித்தான் சிறப்பு அறிவுத் துறைகளில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இவ்வகையில் உங்களது உளவியல் துறை மனிதனுடைய மேம்பாட்டுக்கு எந்த வகையில் உதவும் என்று நினைக்கிறீர்கள்?

உளவியலாளர்களான நாங்கள் ஏன் மனிதர்கள் இந்த மாதிரி செயல்படுகிறார்கள் என்று சொல்ல முடியும். இந்தப் பிரச்சினைகளை இப்படிப் பார்க்கலாம் இதற்கான காரணங்கள் இவ்வாறாக இருக்கலாம் என்று சொல்லலாம். ஆனால் மாற்றுவதற்கான நிறைய விஷயங்கள் சம்பந்தப்பட்டவர்கள் கைகளில்தான் இருக்கின்றன. மனிதர்களை நாங்கள் மாற்ற முடியாது. மாற வேண்டும் என்ற முனைப்பு குறிப்பிட்ட நபருக்குத்தான் இருக்க முடியும். இந்த வகையில் குறிப்பிட்ட சூழலில் மனிதர்கள் ஏன் இந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள் என்று நாங்கள் சொல்ல முடியும். ஏன் வேறுபடி நடந்து கொள்ளவில்லை என்று சொல்ல முடியும். மூலகாரண ஆய்வைச் செய்து வழங்கலாம். நல்ல மருந்துகள் இருக்கின்றன. சில வேளைகளில் விளக்கங்கள் கொடுக்க முடியும். இந்த மாதிரிச் செய்தால் இந்த மாதிரி மாற்றங்கள் உருவாக வாய்ப்பு உண்டு என்று சொல்ல முடியும். அதை மக்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் பிற துறையினர் எப்படிப் பார்க்கப் போகிறார்கள் என்பது ஒரு சுவாரசியமான கேள்வி.

http://www.globaltam...IN/article.aspx

Leave a Reply