சிறிலங்கா இராணுவத்தினர் உளவியல் நோயாளர் – உளவியலாளர் …

யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் படுகொலைச் சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால் இவர்கள் அனைவரும் உள ஆற்றுப்படுத்தற் பயிற்சித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படைக் கல்லூரியின் உளவியற்துறை விரிவுரையாளரான சௌமியா றாமநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

"யுத்தத்தில் பங்கு கொண்ட இராணுவத்தினர் முதலில் உளவியல் அழுத்தங்களுக்கு உட்படுகின்றனர். இவர்களுடன் பணியாற்றுபவர் என்ற வகையில் இதனை என்னால் உணர முடிகின்றது. அவர்கள் பல்வேறு உளவியல் தாக்கங்களுக்கு உட்படுகின்றனர்" என ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் பங்கு பற்றிய பின்னர் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பிய இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றிய றாமநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இதேபோன்றே சிறிலங்காவில் தொடரப்பட்ட நீண்ட கால யுத்தத்தின் விளைவாக அதில் பங்கு கொண்ட இராணுவத்தினரும் மன அழுத்தங்களுக்கு ஆளாகியிருப்பர் என அவர் உறுதியாகத் தெரிவிக்கின்றார்.

"யுத்தத்தில் பங்கு கொண்ட பெரும்பாலான இராணுவத்தினர் Post-Traumatic Stress Disorder -PSTD என்கின்ற உளவியல் நோய்க்கு உட்படுகின்றனர். அறிவியல் ரீதியாக நோக்கில் இதன் விளைவுகள் மோதலின் போது மட்டும் வெளிப்படமாட்டாது. ஆனால் மிகத் தீவிர யுத்தத்தில் பங்கு கொள்ளும் ஒரு இராணுவத்தினன் மன அழுத்தம் தரவல்ல சூழலில் வித்தியாசமான கோணத்தில் செயற்படத் தொடங்குவார். அதாவது அவர் தீவிர யுத்தத்தில் பங்கு கொண்டதன் பின்னர் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு இவர் உள்ளாவதால் இவ்வாறு நடந்து கொள்ள முற்படுவார்" என றாமநாயக்க தெரிவித்துள்ளார்.

இது பொதுவாக இராணுவத்தினர் மத்தியில் காணப்படுகின்ற ஒரு பிரச்சினை என்பதால் இதனை மிகக் கவனமாகக் கையாள்வதுடன், இதற்குத் தேவையான உள ஆற்றுப்படுத்தலையும் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"யுத்தத்தில் பங்கு கொண்டதன் பின்னர் ஏற்படும் PSTD என்கின்ற மன அழுத்த நோயால் பாதிக்கப்படும் இராணுவத்தினரோ அல்லது இவ்வாறான தாக்கங்களுக்கு உட்பட்ட வேறுயாராவது தாம் பெற்றுக் கொண்ட உளத்தை சிதைக்கும் அந்தக் கோரமான, கடினமான அனுபவங்கள் மீண்டும் மீண்டும் அவர்களது மனங்களில் பிரதிபலிப்பதால் இவ்வாறான உளத்தாக்கத்துக்கு உட்படுகின்றனர்.

இவ்வாறு இவர்களின் மனங்களைப் பாதித்த பழைய சம்பவங்கள் மீண்டும் இவர்களை ஆட்கொள்ளும் போது, இவர்கள் தமது உண்மையான நிலையை இழந்துவிடுகின்றனர். இதனால் PSTD என்கின்ற உளவியல் தாக்கத்துக்கு உட்படும் இராணுவத்தினர் ஒருவர் தன்னைச் சூழ என்ன நடக்கின்றது என்பதை அறியாது வன்முறையான சம்பவங்களை மேற்கொள்ள மனதளவில் தூண்டப்படுகின்றனர்" என அவர் தெளிவுபடுத்தினார்.

அண்மைய காலங்களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் தனக்குத் தெரியாது என்பதை ஏற்றுக் கொண்ட றாமநாயக்க அதேவேளையில், இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் அதிகரிப்பதால் தொடர்புபட்ட அதிகாரிகள் உடனடியாக இவற்றுடன் தொடர்புபட்ட காரணங்களை அறிந்து ஆர்வத்துடன் செயற்பட்டு, இவ்வாறான படுகொலைகள் மேலும் நடைபெறாது தடுப்பதற்குகந்த வழிவகைகளை ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும் எனவும் இவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

"வீட்டு வன்முறைகள் மற்றும் கொலைச் சம்பவங்களில் அதிகளவான ஒழுக்கமான ஆண்கள் மற்றும் பெண்கள் ஈடுபடுவதானது, இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கான பிரதான காரணங்கள் அடையாளங் காணப்படாது உள்ளதையே சுட்டிக்காட்டுகின்றது" என றாமநாயக்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவைப் பொறுத்தளவில் யுத்த வலயத்துக்கு கடமைக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர் மீண்டும் திரும்பி வந்தவுடன் அவர்கள் தமது வீட்டுக்குச் சென்று குடும்பத்தவர்களுடன் பொழுதைக் கழிப்பதற்கான விடுமுறை வழங்கப்படுவதாகவும், இதனால் இவர்களின் மன அழுத்தங்கள் குறைக்கப்படுவதாகவும் றாமநாயக்க தெரிவித்துள்ளார்.

"எடுத்துக்காட்டாக ஆறு மாதங்கள் யுத்த களத்தில் பணியாற்றும் ஒருவர் தனது ஒவ்வொரு நாள் வாழ்வையும் இழக்கின்றார். இதனால் இவ்வாறான இராணுவத்தினர் அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டு, அங்கே பெரும்பாலான பொழுதுகளைக் கழிக்க வேண்டும் என பல உளவியலாளர்கள் கூறுகின்றனர்" எனவும் றாமநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் கடமையாற்றும் இராணுவத்தினருக்கு எந்த அடிப்படையில் விடுமுறை வழங்கப்படுவது தொடர்பாக தனக்கு உறுதியாகத் தெரியாது எனவும் இவர் கூறுகின்றார். " இராணுவத்தினருக்கு உள ஆற்றுப் படுத்தல் வழங்கப்படுகின்றது. சிறிலங்கா இராணுவத்தின் அதிகார கட்டளைச் சங்கிலியை எடுத்துப் பார்த்தால் இங்குள்ள ஒவ்வொரு இராணுவத்தினனுக்கும் எவ்வாறான ஆற்றுப்படுத்தல்கள் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். இவ்வாறான உளவியல் மேம்பாட்டுப் பயிற்சிகள் இராணுவத்தினர் பல்வேறு உதவிகளை வழங்குகின்றது" என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

"சிறிலங்கா இராணுவத்தில் கோப்ரல் தர நிலையிலுள்ள ஒருவர் ஏழு சிப்பாய்களுக்கு பொறுப்பாக கடமையாற்றுகின்றார். இவ் ஏழு சிப்பாய்களுடனும் அவர்களது கோப்ரல் ஒவ்வொரு வாரமும் முறைசார் கலந்துரையாடல்களை மேற்கொள்வார். இவ்வாறு மேற்கொள்ளப்படும் நேர்காணல்களின் மூலம் அறியப்படும், அடையாளங் காணப்படும் பிரச்சினைகளை உத்தியோக பூர்வமாக இக் கோப்ரல் பதிவு செய்து அறிக்கையிடுவார். சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பில் நான்கு பிளாற்றூன்கள் ஒரு கொம்பனி ஆகும். இதன்படி, கொம்பனிப் பொறுப்பதிகாரி தனக்குக் கீழுள்ள இராணுவத்தினர் சந்தித்து அவர்களுக்கு தேவைப்படும் உள ஆற்றுப்படுத்தல்களை வழங்குவார். இவ்வாறு சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பின் கட்டளைச் சங்கிலியில் கீழிருந்து மேல்நோக்கி பதவி வகிக்கும் அனைத்து இராணுவ அதிகாரிகளும் தேவைப்படும் பட்சத்தில் தமக்கு கீழுள்ள இராணுவத்தினருக்கு உள ஆற்றுப்படுத்தல்களை தேவையான பல்வேறு வடிவங்களில் வழங்குவர். இதன் மூலம் அனைத்து இராணுவத்தினரதும் உளவியலானது மிகச் சிறப்பாக காணப்படும்" என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேலும் விளக்கமளித்தார்.

எவ்வாறிருப்பினும், இவ் இராணுவத்தினரின் மனங்களை அறிந்து அவர்களின் உளத் தாக்கங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சிறிலங்கா இராணுவ டிவிசன்களில் தகைமையான மனோதத்துவ வைத்தியர் ஒருவர் மட்டும் உள்ளார். "இராணுவ வீரர் ஒருவருக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமா அல்லது இல்லையா என்பதை சிறிலங்கா கட்டளைத் தர அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்வார்கள். இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சிகளில் ஆற்றுப்படுத்தலும் உள்ளடங்குகின்றது. தனது கட்டளையின் கீழ் செயற்படும் இராணுவத்தினர் ஒருவர் எவ்வாறான மனத் தாக்கத்துக்கு உட்பட்டுள்ளார் என்பதை இவ் இராணுவ அதிகாரிகள் அடையாளங் கண்டுகொள்வர்" எனவும் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

"உளவியல் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த தகைமை பெற்ற மனோதத்துவ வைத்தியர் ஒருவராலேயே உளவியல் தாக்கத்துக்கு உட்பட்ட ஒருவரை நன்கு அடையாளங் காணமுடியும். உளத் தாக்கத்துக்கு உட்பட்ட இராணுவத்தினர் ஒருவரை அவருடன் கூடப் பணியாற்றும் சக இராணுத்தினனால் அடையாளங் கண்டு கொள்ள முடியாது" என றாமநாயக்க தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளரால் கூறப்பட்ட விளக்கத்தை இவர் ஏற்க மறுத்துள்ளதுடன், இவ்வாறான ஒரு முறைமை போதியளவு ஆற்றுப்படுத்தலை வழங்கமாட்டாது எனவும் றாமநாயக்க தெரிவித்துள்ளார். "இவ்வாறான உள மேம்பாட்டு பயிற்சிகள் பெற்ற ஒரு இராணுவ அதிகாரியும் தாக்கத்துக்கு உள்ளான இராணுவத்தினனும் ஒரே சூழலில் பணியாற்றுவதால் இவ்வாறான உளத்தாக்கங்களை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதாவது உள மேம்பாட்டு பயிற்சி பெற்ற குறிப்பிட்ட இராணுவ அதிகாரியும் அந்த சூழலில் மனத் தாக்கத்துக்கு உட்பட்ட உள நோயாளி ஆவார். இவ்வாறான ஒரு நோயாளியால் தனது சக இராணுவத்தினனை அடையாளங் கண்டு கொள்ள முடியாது" என றாமநாயக்க விளக்கமளிக்கின்றார்.

கொழும்பு பல்கலைக் கழகத்தில் உளவியல் கற்கைத் துறை விரிவுரையாளரான கலாநிதி சரத் விஜயசூரியா போன்றவர்கள் களத்தில் பணியாற்றும் இராணுவத்தினரைச் சந்தித்து உளவியல் ஆலோசனைகளை வழங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் வனிகசூரிய தெரிவித்துள்ளார். தியானப் பயிற்சி போன்ற பல்வேறு மன அழுத்தங்களைக் குறைக்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறான தியானப் பயிற்சிகளைப் பெற விரும்புபவர்கள் இதனைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இதனை Vipassana தியான மையம் வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் தொடர்பாக வினவியபோது, இவ்வாறான படுகொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொரு இராணுவத்தினர் நிலைப்பாடு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்ட போதிலும், இவர்கள் PSTD என்கின்ற மன நோய்க்கு உட்பட்டிருக்கவில்லை எனவும் வனிகசூரிய பதிலளித்துள்ளார்.

கடந்த வாரம் இராணுவத்தினன் ஒருவன் கண்டியிலிருந்த தனது காதலியின் வீட்டை உடைத்து அங்கே புகுந்து கொண்டதுடன், தனது காதலியையும், காதலியின் தாயாரையும், தந்தையையும் துப்பாக்கியில் சுட்டுப் படுகொலை செய்து விட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இச்சம்பவம் தொடர்பாக வனிகசூரியவிடம் வினவியபோது, "குறிப்பிட்ட இராணுவத்தினன் ஒரு ஆண்டுக்கு முன்னரே இராணுவத்தில் இணைந்திருந்தார். இவர் ஒருபோதும் யுத்தத்தில் பங்கு கொள்ளவில்லை. இவர் தனது தனிப்பட்ட விடயத்துக்காகவே இந்தப் படுகொலைகளை மேற்கொண்டுள்ளார். இவர் இராணுவத்தில் இணைந்திருக்காவிட்டாலும், இந்தப் படுகொலைகளைச் செய்திருப்பார் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன்" எனப் பதிலளித்தார்.

ஆறு ஆண்டு சேவையைப் பூர்த்தி செய்த இராணுவத்தினர் ஒருவர், ஒன்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்த இராணுவத்தினர் ஒருவருக்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டதால், இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஒன்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்த இராணுவத்தினர் தனது இராணுவ பொறுப்பதிகாரியை படுகொலை செய்திருந்தார். "உண்மையில் இந்தச் சம்பவத்தைப் பார்த்தால், இது முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். அதாவது சேவைக் காலம் குறைந்த ஒருவரை தனது பொறுப்பதிகாரியாக ஏற்றுக் கொள்ள முடியாது, பொறாமை உணர்வால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவம் இதுவாகும்" என வனிகசூரியா விளக்கமளித்தார்.

ஆனால் இவை PSTD என்கின்ற மனநோய்த் தாக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் என்பதை வனிகசூரிய ஏற்க மறுத்துவிட்டார். மேற்கூறிய இரு எடுத்துக்காட்டுக்களும் PSTD என்கின்ற நோயின் புதிய அறிகுறிகளாக இருக்கலாம் எனவும், அண்மைக்காலத்தில் சிறிலங்காவில் இராணுவத்தினர் படுகொலைச் சம்பவங்களில் ஈடுபடுவதால், இவர்களைப் பரிசோதிக்க வேண்டும் எனவும் றாமநாயக்க உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

வழிமூலம்: The Sunday Leader - By Dinouk Colombage
மொழியாக்கம்: நித்தியபாரதி


http://www.puthinapp...?20120529106290

Leave a Reply