குழந்தைகள் பொறாமைப்படுறாங்களா? – உடனே சரிபண்ணுங்க!
பள்ளித்தோழர்கள், சகவயது நண்பர்கள், சகோதரன் என யார்மீதாவது உங்கள் குழந்தைகள் பொறாமை கொள்கின்றனரா ? இந்த பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து அவற்றை சரிசெய்ய பெற்றோர்கள் முயலவேண்டும். இல்லாவிட்டால் அந்த குழந்தைகள் இளம் குற்றவாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும் என்று உளவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அவமரியாதை வேண்டாம்
ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு பொறுப்புகள் அதிகம். அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். எனவே அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது. மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளை களைய உதவாது. மாறாக பொறாமை உணர்வைதான் ஏற்படுத்தும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
போட்டியே பொறாமையாகும்
குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான்மையை உருவாக்கி விடுகிறார்கள். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தெளிவாக்குவது கடமை
போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும். அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும். குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை இருளில் தள்ளிவிடும்.
முக்கியத்துவம் அவசியம்
எல்லா குழந்தைகளுமே தங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று கருதுகின்றன. அதை பெற்றோர்கள் புரியாமல் இருக்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. குடும்பங்களில் எப்போதும் சிறிய குழந்தைக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. பெரிய குழந்தை பல விஷயங்களில் ஒதுக்கப்படுகிறார்கள். தனக்கும் பெற்றோர் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக சில குழந்தைகள் தங்களை காயப்படுத்திக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டால், பெரிய குழந்தைகளின் கடமைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறி குடும்பத்தில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, அவருக்கு பொறாமை குணம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அன்பும், சகிப்புதன்மையும்தான் அனைத்திற்கும் அடிப்படை என்பதை பெற்றோர்கள் உணர்த்த வேண்டும்.
இளங்குற்றவாளிகள்
பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல் பாடுகளில் மாற்றம் ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள். அதுவே குற்றச் செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள் என்றும் உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே குழந்தைகளின் பொறாமை குணத்தை களைந்து குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்குவதும் பெற்றோர்களின் கடமையாகும்.
நன்றி தற்ஸ்தமிழ்.
Edited by தமிழ் சிறி, Today, 10:46 AM.